தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது

497

சென்னை: இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட உள்ளது. இதேபோல் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும், போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலை கிராமங்கள் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் சொட்டு மருந்து குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களுக்கும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 6 ஆயிரத்து 700 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here