இரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. “பெரும் காட்டுத்தீயை அணைப்பதற்கு குழந்தைகள் விளையாடும் தண்ணீர் துப்பாக்கியை பயன்படுத்துவது போலத்தான் இந்த இரவு ஊரடங்கு; இதனால் எந்தப் பயனும் இல்லை” என்றும் ”மக்கள் அனைவருமே தூக்கத்தில் நடக்கிறார்களா?” என்றும் இரவு ஊரடங்கைக் கலாய்த்துப் பல மீம்கள் வைரலாகின்றன.
இரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா? இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ‘’ மருத்துவரீதியாக பார்க்கும்போது இரவு நேர ஊரடங்கால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என நிரூபிக்கப்படவில்லை. எனினும் கொரோனா பரவல் குறித்த சில மக்களின் அலட்சியப்போக்கை மாற்றுவதற்கு இந்த இரவு நேர ஊரடங்கு நிச்சயம் உதவும்.
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடுகிறார்கள். மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் மறந்துவிட்டார்கள். எனவே, இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டுப் போகவில்லை; இரண்டாவது அலையாக வந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதற்கு இரவு ஊரடங்கு நல்லதொரு காரணியாக இருக்கும். அப்படி இரவு நேர ஊரடங்கு வரும்போது அது மக்களிடையே கொரோனா பரவல் குறித்த அலட்சியப்போக்கை மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும். முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அன்றாடங்காய்ச்சிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே இரவுநேர ஊரடங்கு என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.
கொரோனா பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. அது கொத்து கொத்தாக பரவும் கொரோனா பரவலை தவிர்த்திட முடியும். மேலும் சென்னை போன்ற மாநகரங்களில் ஞாயிறு அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஞாயிறு ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது மக்கள்தொகை அதிமுள்ள நகரங்களில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் குறிப்பிட்ட பலனளிக்கும்” என்கிறார் அவர்.