புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வலுவான சுகாதார கட்டமைப்பால்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆர்.டி. பி.சி.ஆர். மூலம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுடன் மலேரியா, டெங்கு போன்ற மழைக்கால நோய் பரவல் தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த 4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட் டுகள் மேலும் வந்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.