தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து உதவித்தொகையை பெற்று வருவதாக புகார் எழுந்தது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி, விவசாயிகள் அல்லாதவர்கள் பெற்ற நிதியுதவியை திரும்ப வசூலித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருக்கிறதா? என வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணை நடத்தினர். அதில் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கூறும்போது, பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதா? என கண்டறிய வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முறைகேடாக நிதியுதவி பெற்றுள்ளனர். அதாவது ரூ.1 கோடியே 20 லட்சம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்த பணம் திரும்ப வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.67 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் வசூலிக்கப்படும். தவறு செய்ததாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தவறு யார் செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.