சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு வாகனங்களில் உள்ள முகப்பு விளக்கு தடுப்பு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வெளியீடு ஆகிய நிகழ்வுகளை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஓவியர் ரவி, கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை கிளையின் பொறியாளர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை வெளியிட்டு பேசினார். புதுக்கோட்டை அரசு ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் ஆய்வாளர் முத்துக்குமார் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சாலையில் எவ்வாறு விபத்துகள் ஏற்படுகின்றன அதனை எவ்விதமாக தடுக்கலாம் என்று சாலை பாதுகாப்பு குறித்து மிக விளக்கமாக பேசினார்.
பின்னர் சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்கு தடுப்பு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அடங்கிய பிரசுரங்களை பொதுமக்கள் அனைவரிடமும் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவாஜி, அகிலா சுரேஷ்ராஜன் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகளும், அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகளும் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் கோபிநாத் நன்றி கூறினார்.