ஆரம்பமே படுஅமர்களம்.. சசிகலா காரில் அதிமுக கொடி… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்;- இன்றுடன் சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. செயற்கை சுவாசமின்றி சுவாசித்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், சசிகலா டிஸ்சார்ஜ் ஆகலாம் என பரிந்துரை செய்திருந்தனர். மேலும், சில நாட்கள் தனிமையில் இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அப்போது, அவருக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிமுக அதிர்ச்சியடைந்தனர். மேலும், சசிகலாவை காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் முந்தி அடித்துக்கொண்டு கார் அருகாமையில் வருகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஜெய்ஆனந்த் பின்தொடர்ந்து காரில் செல்கின்றனர். சில நாட்கள் பெங்களூருவில் ஓய்வெடுத்து விட்டு சசிகலா 3 அல்லது 5ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
