நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொது விநியோக முறைக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை கட்டமைப்பை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் இதுவரை தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள் இணைந்துள்ளன. தமிழகத்தில் 2 கோடியே 9 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 32 மாவட்டங்களில் இந்தத் திட்டம் இன்று அமலுக்கு வருகிறது. இதனை தலைமைச் செயலகத்திலிருந்தபடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார்.
இதன் மூலம், ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்துள்ள யாரும், தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும். இந்தத் திட்டத்தின்மூலம், ஒருவர் வேறு மாநிலங்களில் ரேஷன் கார்டுகளை வைத்திருக்க முடியாது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்ற யாரும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தத் திட்டத்துக்காக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கூடுதலாக 5 சதவீத பொருட்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.