எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு

637

எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசியும், பாதுகாவலரும், நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணன் 92. (பிப்., 3) காலமானார். தமிழக கேரள மாநில எல்லை அருகே ஏலக்கரையை சேர்ந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன் 92. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான இவர், சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படத்திலும் இவரே ‛டூப் போட்டு நடித்துள்ளார். சென்னை, கோபாலபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த டிசம்பர் 27ம் தேதி வீட்டின் மாடிப்படியில் தவறி விழுந்தார். இதில், பின் தலையில் அடிபட்டு ஆறு இடத்தில் ரத்தம் உறைந்து சுயநினைவை இழந்தார். இதையடுத்து மயிலாப்பூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜன.1ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே இன்று மாலை 3:15 மணிக்கு காலமானார். இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. மறைந்த ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கார்த்திகாயினி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். தந்தை குறித்து அவரது மகன் கோவிந்தராஜன் கூறியதாவது: எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டுகாலம் தொடர்புடையவர் அப்பா. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா மற்றும் அரசியல் மூன்றிலும் உண்மையான விசுவாசியாக அப்பா இருந்தார். எம்ஜிஆரின் கடைசி காலம் வரை அப்பா தான் பாதுகாவலராக இருந்தார். சினிமாவுக்காக சென்னைக்கு ஒன்பது வயதிலேயே வந்த அப்பா, 1949 மங்கையர்கரசி படத்தில் முதன்முதலாக பி.யூ.சின்னப்பா உடன் நடித்தார். 1947லிலேயே எம்.ஜி.ஆரின் அறிமுகம் அப்பாவுக்கு கிடைத்தது. 1953 எம்.ஜி.ஆர் நாடக மன்றம் துவங்கிய போது, அந்த நாடகங்களில் அப்பாவும் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் நாடோடி மன்னன் படம் துவங்கிய போது, அப்பா ஸ்டண்ட் கலைஞராகவும், எம்.ஜி.ஆரின் இரட்டை வேடத்தில் அப்பா தான் ‛டூப்பாக நடித்தார். அதிலிருந்து எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த, ஊருக்கு உழைப்பவன் படம் வரை அப்பா தான் எம்.ஜி.ஆருக்கு ‛டூப்பாக நடித்தார். 1982 ல் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது, எம்ஜிஆரின் உத்தரவின்படி ஜெயலலிதாவுக்கும் அப்பா தான் 1989 வரை பாதுகாவலராக இருந்தார். அதன் பின் வயது முதிர்வு காரணமாக அப்பா அப்பணியில் இருந்து விலகினார். 1991ல் ஜெ., முதல்வராகி விட்ட போது, எந்த தொடர்பும் அப்பா வைத்துக் கொள்ளவில்லை. ஒரு முறை குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை அப்பாவுக்கு தர எம்.ஜி.ஆரே முன் வந்து கேட்டார். ஆனால், பதவி வந்தால், எம்.ஜி.ஆரை விட்டு விலக நேர்ந்து விடுமோ என நினைத்து, அப்பா வேண்டாம் என மறுத்து விட்டார். பதவி கிடைத்தும், எம்.ஜி.ஆருக்காக அதை வேண்டாம் என மறுத்தவர் அப்பா. எம்.ஜி.ஆர் மறைந்த பின், 33 ஆண்டுகள் அப்பா ஒரு வித தனிமையில் தான் வாழ்ந்தார். பத்திரிகைக்கு கட்டுரை வழங்குவது, எம்ஜிஆரை பற்றி நினைவு கூறுவது என்றே மீதி வாழ்க்கையை வாழ்ந்தார். எங்களை பொறுத்தவரை அப்பா நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டு காலம் இருந்த என் அப்பாவுக்கு இயல், இசை நாடக மன்றத்திலிருந்து மாதம் தோறும், 1,500 ரூபாய் வருமானம் வரும். அது தான் அவரது வருமானம். எம்.ஜி.ஆரின் துாய்மையான விசுவாசி என்றால் என் அப்பா தான். எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், 20 ஆண்டுகாலம் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகளை அப்பா எழுதி வந்துள்ளார். எங்கள் அம்மா இறந்தது கருணாநிதியின் பிறந்த நாளன்று, என் அப்பா இறந்தது அண்ணாத்துரை நினைவுநாளில் இறந்துள்ளார். அண்ணாதுரைக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும். எம்.ஜி.ஆர் குண்டு அடிபட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு வேண்டிய பாதுகாப்புகளை அப்பா தான் முன்னின்று செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். எம்ஜிஆருக்கும் அண்ணாதுரைக்கும் அப்பா தான் பாலமாக இருந்தார். அப்பா எழுதிய, எம்.ஜி. ஆர் ஒரு சகாப்தம், மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர்., என்றும் வாழும் எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று புத்தகத்தின் விற்பனை மூலம் வரும் வருமானத்தை அப்படியே, பாலவாக்கம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அப்பா எழுதி கொடுத்து விட்டார். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த புத்தகத்தை வாங்கும் போது ஒவ்வொருவரும் தர்மம் செய்கின்றனர். வாழும் போது அப்பா நிறைவான எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். மொத்தத்தில் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப அப்பா வாழ்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here