அரிமளம் ஒன்றியத்தில் மாணவர்களை கவரும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் செயல்படும் அரசு பள்ளி

978

அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால்பாண்டியன், உதவி ஆசிரியர் விஜயராஜ் ஆகியோரின் முயற்சியே ஆகும். மேலும் கரையப்பட்டி, அம்புராணி, கப்பத்தான்பட்டி ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இதனால், இந்த பள்ளி தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் கூடுதல் வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரையப்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் செயல்படும் இப்பள்ளியை சீரமைக்க நிதி திரட்டப்பட்டது. அந்தவகையில் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் மூலம் ரூ.4 லட்சத்து 21 ஆயிரம் சேர்ந்தது. அதில், பள்ளியின் 2 கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு 49 இன்ஞ் எல்.இ.டி. டி.வி., புரோஜெக்டர், லேப்-டாப், இன்வெட்டர், யு.பி.எஸ், ஆடியோ சிஸ்டம் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், மாணவர்களை கவரும் பொருட்டு பள்ளி கட்டிட சுவர்களில் பலவகை கலர்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தரைத்தளங்களிலும் பெயிண்டு அடிக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் அமர பெஞ்சுகள் மற்றும் கழிப்பிட வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-20-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 25 மாணவ-மாணவிகளுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி, 2020-21-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்தது. அதற்காக எடுக்கப்பட்ட தீவிர முயற்சியின் காரணமாக மேற்கண்ட 3 கிராமங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளில் படித்து வந்த 15 மாணவர்கள் மற்றும் 2 புதிய மாணவர்கள் என 17 பேர் சேர்ந்துள்ளனர். அதன்படி, ஏற்கனவே உள்ள மாணவர்களையும் சேர்த்து தற்போது 36 பேர் உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்த அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு இங்குள்ள பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இங்கு ஆங்கில வழி கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை போன்று பெல்ட், அடையாள அட்டை, ஷீ, டை மற்றும் சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளியில் பெரிய திரை மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் அரசு வழங்கி உள்ள பல்வேறு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு செய்முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 49 இன்ச் எல்.இ.டி. டி.வி. மூலம் நேரலை வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் வகுப்பு, பாடல், நடன வகுப்புகள், யோகா, ஆங்கிலத்தில் எழுத, பேச பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் குழு ஆரம்பிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் பள்ளி செயல்பட்டு வந்தாலும், சாலையின் ஓரத்தில் குளத்திற்கு அருகாமையில் செயல்படும் இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பள்ளிக்குள் ஆடு, மாடுகள் நுழைந்து அசுத்தம் செய்து விடுகின்றன. ஆகவே, மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதி அல்லது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here