அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

73

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டு பொது சுகாதாரத் துறையில் தமிழகம் வலுவாக இருப்பதற்கு பேருதவி புரிபவர்கள் அரசு மருத்துவர்கள். அப்பேற்பட்ட சேவை மருத்துவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் இந்த “திடீர் அரசாணை” அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதோடு, இது சமூக நீதிக்கே எதிரானது.

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குறிப்பாக புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (மருத்துவம் அல்லாத சிறப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, மனநலம் சிகிச்சை பிரிவு) தேவை உள்ள நிலையில் இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

ஆகவே, அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான 50% இடஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

  • விஜயபாஸ்க்கர் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here